ங ப்போல் வளை
ங ப்போல் வளை.
புது வருடம் பிறந்து விட்டது. எப்போதும் பனியில் நனைந்தபடி பிறக்கும் வருடம், இந்த வருடம், அடாத மழையின் தொடர்ச்சியாக வந்த மூன்று நாள் மழையில் குளித்தபடி பிறந்தது.
" ஆத்தாடியாத்தி, எந்த வருசமும் இப்படி மழையைப் பார்த்ததில்லையடி ஆத்தா. கார்த்திகை கழிஞ்சாலே, கடும் மழை இல்லையிம்பாக, இப்ப என்னடான்னா, மார்கழி பிறந்தும்ல மழை கொட்டுது" என இயற்கையை வியந்தபடி பூவாத்தா வாசலை எட்டிப் பார்க்க, அவரது மூத்த பேரன் மனைவிகள் இருவரும், மெனக்கெட்டு ஒரு மணி நேரமாகப் புள்ளி வைத்துப் போட்டிருந்த பூக்கள் நிறைந்த வண்ணக் கோலம், கரைந்து தூரிகையால் ஆங்காங்கே துடைத்து விட்ட மாடர்ன் ஆர்ட் போல் வண்ணக் கலவைகள் தங்களுக்குள் கை கலந்து உரு மாறி நின்றன.
கையில் காப்பிக் கோப்பையோடு, உருமாறிய கோலத்தையே , வராண்டா வழியே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பூவாத்தாவின் கடைசிப் பேரன் மனைவி வைசாலி.
" இது என்னடி அதிசயமா, அசலூர்காரி இங்கனை உட்கார்ந்திருக்கா" என அடுத்த அதிசயமாய்ப் பார்த்தார் பூவாத்தா.
அவர் குரல் கேட்டும் கண்கள், கரைந்த கோலத்தின் வண்ணத்தில் உரைந்திருக்க, மனதில் பல்வேறு எண்ணங்களை ஓட்டிப் பார்த்துக் கொண்டே, சூடு பறக்கும் காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த வைசாலி, ஒரு மென்னகையை மட்டுமே அவருக்குப் பரிசாகத் தந்து, கலைந்த கோலத்தை, கலைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில மாதங்களுக்கு முன் எனில், அந்தச் சிறு நகரத்தின் வீட்டில், ஒட்டியும், ஒட்டாமல் இருந்த ஓர் உறவு தான் வைசாலி. ஆனால் இன்று அவளிடம் அத்தனை மாற்றம், அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் அவள் கணவனும், மாமியாரும் தான். அவளை எதற்கும் கட்டாயப் படுத்தாமல், அவள் போக்கிலேயே அவளைத் தங்கள் பக்கம் வளைத்தவர்கள்.
வைசாலி ,அந்த வீட்டின் கடைக்குட்டியான, ப்ரதீபனின் காதல் மனைவி. இருவரும் ஒன்றாக ஐடி கம்பெனியில் வேலைப் பார்த்தவர்கள், இருவருக்குள்ளும் நல்ல நட்பும், புரிந்துணர்வும் இருந்தது. அதனை நட்பு என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி, அவர்களுக்குள்ளான ஈர்ப்பில் வாழ்க்கைத் துணை என வாழ ஆசைப்பட்டனர்.
பிரதிபன் முதலில் விருப்பத்தைச் சொல்ல, " எனக்கும் ஆசை தான் ப்ரதீ, ஆனால் நம்ம வீடுகளில் ஒத்துக்குவாங்களா" என அவள் கேள்வி எழுப்ப,
" நமக்குள்ள அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு, இரண்டு பேர் ஃபேமலிக்குள்ள அது வரணும்னு எதிர் பார்க்க முடியாது. ஆனால் நீ, என் வீட்டு ஆட்களையும், நான் உன் வீட்டு ஆட்களையும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம். நம்முடைய லைஃப் ஸ்டைல்ல, அவங்க ஒரு பார்ட் , அவ்வளவு தானே" என அவனும் கருத்தை முன் வைக்க, அவளுக்கும் சரி என்று பட்டது.
அவரவர் வீட்டில், விருப்பத்தைச் சொல்ல, முதலில் பெரிய எதிர்ப்பு தான். ப்ரதீபன் குடும்பம், மகனுக்காக இறங்கி வர, வைசாலிக் குடும்பம், "பெற்ற கடனுக்குக் கல்யாணத்துக்கு வேணும்னா வந்து நிற்கிறோம். அதற்கு மேல எதிர் பார்க்காத" என்றவர்கள், வைசாலியை கை கழுவுவது போல் கோவிலில் நடந்த திருமணத்துக்கு மட்டும் வந்தவர்கள், கிளம்பி விட, அவளது அம்மா மட்டும், ப்ரதீபனிடமும் , அவன் அம்மாவிடமும் மகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, மற்றவர் அறியாமல் கண் கலங்கிச் சென்றார்.
வைசாலியின் அண்ணன், அக்காள் குடும்பங்கள் அமெரிக்காவிலிருக்க, அவளது பெற்றோர்கள், அவர்களுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரர்களாகச் சென்ற போதும், அவளது அப்பா, அதை மறைத்து வெளியே கெத்தாக , அமெரிக்கா செல்வதாகச் சொன்னவர், வைசாலி தான், மானத்தை வாங்கி விட்டது போல் காரணம் காட்டிச் சென்றார்.
சென்னையில், இருவரும் வேலையிலிருக்க, அங்கேயே திருமணம், இங்கே ப்ரதீபன் வீட்டில் வரவேற்பு என ஏற்பாடு செய்திருந்தனர். நண்பர்கள் கூட்டமிருந்ததால், வைசாலி பிறந்த வீட்டினர் வராததையும் சமாளித்துக் கொண்டாள். ஒரு வருடம், இயல்பாக ஓடிய வாழ்க்கை, அவ்வப்போது ப்ரதீபனும், எப்போதாவது வைசாலியும் உறவினர்கள் போல் வந்து செல்வார்கள்.
ப்ரதீபனுக்கு, இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும், மத்தியதர வர்க்கம். இவன் தலையெடுத்த பின்பே ஏற்றம் கண்டது. எனவே தம்பியைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, என்பதற்காகவே கலப்பு மணத்துக்கும் ஒத்துக் கொண்டனர்.
புறநகர்ப் பகுதியில் அவர்கள் தாத்தா, வாங்கிப் போட்டிருந்த மனையில் அப்பா, சின்ன வீடு கட்டி குடித்தனம் நடத்த, பிள்ளைகள் வளர, வளர வீட்டையும் ஒவ்வொரு அறையாகச் சேர்த்து, மாற்றியமைத்தனர். ஒரே சமையல், சாப்பாடு தான். வீட்டுச் செலவைப் பகிர்ந்து கொண்டனர். பிள்ளை குட்டிகள் பெருக, மற்ற செலவுகளுக்கு, இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று இருந்தது.
ப்ரதீபன் தலையெடுத்து, வெளிநாடு சென்று வரவும் இவர்கள் நிலையும் சீர்ப்பட்டது. அவன் வந்து போகும் போது தங்குவதற்கென மாடியில் தனியறை வசதிகளும் செய்யப்பட்டது. வைசாலியை மணம் முடித்து வந்த பொழுது, ஒட்டி ஒட்டாமலே நடந்து கொண்டனர். வைசாலிக்கும் அதுவே வசதியாகப் போனது.
கொரானா காலம் லாக்டவுன் , இவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. கடை, கான்ட்ரேட் எனச் செய்த தொழில்கள் தடுமாற்றம் கண்டது. இருந்த சேமிப்பை வைத்து ஓட்டினர். ஆபத் பாந்தவனாக அப்போதும் ப்ரதிபன் , வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியாமல் துணை நின்றான், இந்த விஷயங்களில் வைஷு எப்போதுமே தலையிட மாட்டாள்.அந்த குணமே அவனை அவள் பால் ஈர்த்தது.
ப்ரதீபன் வைஷாலிக்குச் சென்னையில், வீட்டிலிருந்தே வேலை என்ற நிலை வந்தது. நான்கு சுவர்களுக்குள் , நோய் பீதியோடு வாழ்க்கை. லாக்டவுன் நேரத்தில் வொர்க் ப்ரம் ஹோம், வீட்டு வேலைகள் என இரண்டையும் சமாளிக்க முடியாமல் திணறினர். அதிலும் வார இறுதியில், நண்பர்கள், கெட் டு கெதர் , எங்காவது மினி ட்ரிப் செல்வது என ஓட்டியவர்களுக்கு மன அழுத்தம் தாக்கியது.
எவ்வளவு நேரம், ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பது. தாம்பத்தியமும் ஒரு வித சலிப்பைத் தந்தது. ப்ரதீபன், மனைவியிடம், " வைஷு, ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை. ஊர் பக்கமெல்லாம் இவ்வளவு கட்டுப் பாடும் பயமும் இல்லை. ஊருக்குப் போகலாமா" என்றான்.
அதில் அதிர்ந்த, வைஷு, " ப்ரதீ, ஒரு நாள், இரண்டு நாள்னா ஓகே. மாசக் கணக்கில் எப்படி இருக்கிறது. எனக்கு அங்க ஒத்து வராது. அவங்களுக்கும் நாம சுமை தான்" என வாதிட்டவள்,
" நீ வேணும்னா போயிட்டு வா. ஐ கேன் மேனேஜ்" என்றாள். முகத்தைத் திருப்பிக் கொண்டவன், "அதெல்லாம் முடியாது. நீ என்ன செய்யறியோன்னு கவலையா இருக்கும். அதோட மருமகளை விட்டுட்டு வந்தியான்னு குடும்பமே வசை பாடும்" என்றவன் விசயத்தை அத்தோடு விட்டுவிட்டான்.
ஆனால், வீடியோ கால் வழியாக, வீட்டினரோடு, அண்ணன் பிள்ளைகளோடு, அம்மா, அப்பா,அப்பத்தா எனப் பேசும் போது அவன் முகம் மலர்ச்சியாக இருப்பதையும், அரை மணி, ஒரு மணி நேரம் கூட அரட்டை அடிப்பதையும் பார்த்தவள்,தன் மனதை மாற்றிக் கொண்டு, " ஈபாஸ் வாங்கு. போகலாம் " என்றாள்.
" நிஜமாவா. நீ அட்ஜஸ்ட் பண்ணிடுவியா. அப்படி முடியலைனா திரும்பி வந்துடுவோம்" என்ற கண்டிஷனோடு புறப்பட்டார்கள்.
கடைசி மகனும், மருமகளும் தங்களோடே வந்து தங்குவதில் லட்சுமி, சந்தானம் இருவருக்குமே மகிழ்ச்சி தான். லட்சுமி, சாப்பாடு விஷயத்தைக் கவனித்தால், சந்தானம் மருமகளுக்கு வீடு வசதிபட வேண்டும் எனப் பார்த்து பார்த்துச் செய்தார்.
நோய்த் தொற்று அச்சம் இருந்த காலத்திலும் முதலில் ஆட்டம் கண்ட இவர்கள் வீடு, பின் சமனடைந்தது. அண்ணன்கள், வருமான பற்றாக்குறையைத் தம்பி குடும்பம் ஈடு செய்ய, அதுவே பெரிய நிம்மதியைத் தந்து மூத்த மருமகள்களும் சுமூகமாகவே குடும்பத்தை நடத்தினர். வைசாலி, ப்ரதீபனுக்கான பணி நேரங்கள் மாறி இருக்க , பெரும்பாலும் இரவு பகலாகக் கணினி முன் இருப்பவர்களுக்கும் லட்சுமி பக்குவமாகப் பார்த்துக் கொண்டார்.
தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டாமல் இருந்த மருமகளை, லட்சுமி , பாசமான பேச்சாலும், செயல்களாலும் கவர்ந்தாரெனில், அப்பத்தா அதிகாரமான பேச்சால் உரிமையை நிலை நாட்டினார்.
வைசாலியும் அலுவல் இல்லாத நேரங்களில் புகுந்த வீட்டினரோடு பழக ஆரம்பித்தாள். ஓர்ப்படிகள், நக்கல் பேச்சை ரசித்தவளுக்கு, அவர்களோடு, சகோதரி பாசம் தோன்றியது. அவர்கள் எளிதாகச் செய்யும் வேலையை இவளால் செய்ய இயலாமலும், இவள் இயல்பாகச் செய்யும் டெக்னாலஜி , பணப் பரிவர்த்தனை ஆகியவற்றை வைசாலி சுலபமாகச் செய்வதும் ஒருவர், மற்றவரை ஆச்சரியமாகப் பார்த்தனர். பிள்ளளைகளும் சித்தி, சித்தப்பா என ஒட்டிக் கொண்டு திரிய, ஒய்வு நேரத்தில் இவர்களும் தாயம்,பல்லாங்குழி , கேரம், சீட்டு என விளையாடி குடும்பத்தோடு கலந்தனர்.
"இது தான் உண்மையான ஸ்ட்ரெஸ் பஸ்டர்" என இருவருமே உணர, "இப்படி எல்லாம் சின்னப் பிள்ளைல விளையாடினது " என ப்ரதீபனின் அண்ணன்களும் பழங்கதை பேசினர்.
ஆனால் அதிலும் ஒரு பிரச்சனையாக, பூவாத்தா, " ஏத்தா கல்யாணமாகி வருஷம் திரும்பிடுச்சு, இன்னும் ஒரு புழு, பூச்சியைக் காணமே" என மெல்ல ஆரம்பிக்க,
" அதுக்குப் பதிலா, கண்ணுக்குத் தெரியாத கிருமி வந்திருக்கு அம்மாச்சி" எனக் கேலி செய்த இளைய மருமகள் வைஷுவுக்கு ஆதரவாகவே பேசினாள். கேலியும் கிண்டலுமாகப் பேச்சு ஓடிய போதும், எல்லாருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. லட்சுமியும் மருமகளிடம் ஜாடை மாடையாகத் தங்கள் ஆசையைச் சொல்ல, சிரித்து மழுப்பினாள் வைஷு.
தங்களது அறையில் கணினி முன் அமர்ந்திருந்து வேலை முடித்து ஆப் லைன் வந்த மனைவியைக் கட்டிலிருந்தபடியே ப்ரதீபன் கை நீட்டி அழைக்க, நெட்டி முறித்துக் கழுத்தை பின்னால் சாய்த்து அசதியை ஓட்ட முயன்றவள்,
" அப்பா, முடியலைடா ப்ரதி" என மெத்தையில் விழுந்து, அவன் மார்பில் தலை வைத்து , குறுக்காகப் படுத்துக் கொண்டாள். அவள் சிகையைத் தடவி, தோள்களை அழுத்தி விட்டு, மேனியை வருடியவன், " வைஷு" எனக் குழைந்து அழைத்ததிலேயே , " ம்" என்றவள், குரலில் எதுக்கு அடி போடுற, என்ற கேள்வி இருந்தது.
" வைஷு டியர், இப்படி உட்கார்ந்து வேலை பார்க்கிறது, படுத்துத் தூங்கிறது, வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடக்கிறது , ரொம்ப ஸ்டரெஸ்ஸா இருக்குல்லடி, எதாவது புதுசா ட்ரை பண்ணுவோமா" என்றான். " அது தான், பல்லாங்குழி,கோலி குண்டுன்னு , கிரிக்கெட்டுன்னு உன் அண்ணன்களோட விளையாடுறியே பத்தாதாக்கும்" என்றவள்.
" கொரானா காலம், அவனவன் வேலை, வெட்டியில்லாமல், உயிருக்கு பயந்திட்டு இருக்கான். நீ என்ன புதுக் கொலாபரேஷன் செய்யப் போற. பேசாமல் இரு. சென்னையில ஸ்ட்ரெஸ்ஸுன்னு தான இங்க வந்தது. இதுவே நல்லா தான் இருக்கு. அடுத்ததை ஆரம்பிக்காத " எனக் கடிந்து கொண்டாள் .
" கொலாபரேஷன் தான்டி டார்லி, ஓல்ட் கொலாபரேஷன், பட் நியு ப்ராஜக்ட். பேர் கூட வச்சிட்டேன் வைஷு2. O " என அவளைத் தன் மேல் இழுத்துக் கொண்டு ரகசியமாகச் சொல்லவும், " என்னது" என அதிர்ந்தவள்,
" நீயெல்லாம் படிச்சவன் தான. உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா. இந்த நேரம் வயித்தை தள்ளிட்டு போய், கைனகாலஜிஸ்ட் நின்னா, நம்மளை அசிங்கமா பார்க்கமாட்டாங்க. ஏற்கனவே எவ்வளவு மீம்ஸ், டாக் ஆன்லைன்ல ஓடுது. என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்க்காத. நம்ம கேங் கேலி செஞ்சே மானத்தை வாங்கிடும்" எனப் பொரிந்து தள்ளவும்.
" டார்லி, எவனோ கேலி செய்வான்னு நம்ம புள்ளை பெத்துக்காம இருக்க முடியுமா. இந்தக் கொரானா ஆரம்பத்தில் தான், என் தங்கச்சி புள்ளை பெத்துக்கிட்டா. இதே மூக்கு, வாயி, கண்ணு" என அவளது அங்கங்களைப் பட்டியலிட்டு, கையால் தொட்டுக் காண்பித்து, " எல்லாம் இருக்க மாதிரி, குட்டி வைஷூவை பெத்துக் கொடுத்துடு. அதைக் கொஞ்சிட்டே இருந்தா. என் ஸ்ட்ரெஸ் எல்லாம் ஓடிடும்" என அவன் ஐஸ் வைக்க,
" கற்பனை நல்லா தான் இருக்கு. ஆனால் டைம் சரியில்லை. அப்படியே நான் ப்ரக்னெட் ஆனாலும் தைரியமா ஒரு ஹாஸ்பிடல் போக முடியுமா, அது சேஃபா இருக்குமா. அது பெரிய டென்ஷன், வேண்டாம்பா " என அவள் வார்த்தையாடினாள்.
" அலை எப்ப ஓயறது. கடல்ல எப்ப முங்குறது. இனிமே கேள்வியே கிடையாது, ஒன்லி ஆக்சன் தான். எனக்கு வேணும்னா, வேணும்" என அவன் சிறு குழந்தையாய் அடம் பிடிக்க, " எதில தான் அடம் பிடிக்கிறதுன்னு இல்லையா" எனத் தலையணையை வைத்து அவள் அவனை அடி வெளுக்க, தலையணை ஆயுதத்தையும், அடித்தவளையும் சாமர்த்தியமாகக் கைப்பற்றியவன், இரண்டையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன்.
" ஹேய் பேபி, இது தான் சரியான டைம். இங்கையே இருக்கோம். அம்மா, அப்பத்தா, அண்ணிங்க எல்லாம் இருக்காங்க. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், டாக்டர்ஸை விடக் கை தேர்ந்தவங்க. நானும் டென்ஷன் இல்லாமல் இருப்பேன். ஒத்துக்கடி" எனவும்,
" எல்லாம் சரி தான் ப்ரதீ. ஆனால் பிரக்னன்ஸி, டெலிவரி அவ்வளவு ஈசியான விசயமில்லை. உடம்புலையும், மனசிலையும் ஏகப்பட்ட சேஞ்சஸ் வருமாம் . என் அம்மா பக்கத்தில் இருந்தா, அவங்கக்கிட்ட, என் இயலாமை எல்லாம் கோபமா கொட்டுவேன். அவங்க தான் விட்டுட்டுப் போயிட்டாங்களே. என் இயலாமையை உன்கிட்ட காட்டிடுவேனோன்னு பயமா இருக்கு. நீயும் என்னை வெறுத்திட்டேன்னா. நான் எங்கடா போவேன்" என அவள் அழவும், மார்பில் தாங்கிக் கொண்டவன்,
" ஏய், லூசு பொண்டாட்டி. அதுக்குத் தான்டி, இங்க இருக்கும் போதே புள்ளையைப் பெத்துக்கலாம்னு சொல்றேன். உங்க அம்மா இல்லைனாலும் , எங்கம்மா நம்மளை சமாளிப்பாங்க. சின்னச் சின்ன அசௌகரியங்களுக்கு, அப்பத்தா யோசனை சொல்லுவாங்க. அண்ணிங்க ஹெல் பண்ணுவாங்க" என வரிசையாகக் காரணங்களை அடுக்கி, அவளைச் சம்மதிக்க வைத்தவன், மெல்ல அவள் மனதிலும், உடலிலும் குழந்தை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சம்சாரச் சாகரத்தில் மூழ்கினான் பிரதிபன்.
இதோ, இன்று புது வருடத்தின் முதல் நாளில் காபியைச் சுவைத்துக் கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்து அமர்ந்தவன், " குட்மார்னிங் குட்டி டார்லி, அப்பா உங்களைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கேன். எப்போ வெளியே வர்றீங்க" என அவள் வயிற்றுக்கு நேராகக் குனிந்து பேசவும், மேடிட்ட வயிற்றில் படபடவென அசைவு தெரிந்தது.
" குட்டி டார்லி, வர்றாலாம். ஆட்டத்தைப் பாரு" என வைஷுவும் அவன் கைகளை, தன் வயிற்றில் நகர்த்திக் காட்டி, தங்கள் மகவை உணரவைத்தாள்.
" அடேய் பேராண்டி, நீ ஆர்வகோலாறுல இப்பவே வான்னு விரட்டாத. இன்னும் பத்து நாள் செண்டு வரட்டும். அவுக ஆத்தாளுக்கு வளைகாப்பு பூட்டிக்குவோம்" என்றார் பூவாத்தா.
ஆம் இன்று வீட்டோடு வளைகாப்பு போட, ஏற்பாடு செய்து உள்ளனர். பிறந்த வீட்டிலிருந்து கட்டுசாதம் கட்டி வந்து, விருந்து போட்டு அழைத்துச் செல்வர். வைசாலி தன் அக்காவுக்குச் செய்ததையெல்லாம் பார்த்து இருக்கிறாள். வாய் விட்டுச் சொல்லாத போதும், அவள் மனம் கனக்கத்தான் செய்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல், "மற்றவராவது மகிழட்டும் " எனப் புகுந்த வீட்டினர் செய்த அலங்காரங்களுக்கெல்லாம் இசைந்தாள்.
சேரில் அமரவைத்து, வளையல் பூட்டும் நேரம் சரியாக, வாசலில் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து அவளது பெற்றோர் இறங்கி வந்தனர். இரண்டு வருடத்துக்கு முன்பான தேகம் இளைத்து, கறுத்து இருந்தார்கள்.
வைசாலி ஆச்சர்யமாகப்பார்க்கவும், " முதல்ல உங்க அப்பா, அம்மா ஆசீர்வாதம் பண்ணட்டும். அப்புறம் சாவகாசமா பேசலாம்" என்ற அப்பத்தாவின் குரலில், வைசாலி மனம் நிறைய, அம்மாவின் கையால் வளைபூட்டு சிறப்பாக நடந்தது.
கொரோனா தொற்று அதிகரிக்கவுமே, வைசாலியின் உடன் பிறந்தவர்கள் பெற்றவர்களை இந்தியா அனுப்பி விட, அவர்கள் பயணமே, அவர்களுக்கு வினையாக வந்து, தொற்று தொற்றியது. தன்னால் இயலாத நிலையில், வைசாலிக்கு போன் அடிக்க, ப்ரதீபன் தான் அழைப்பை ஏற்றான்.
வைசாலி ஐந்து மாத கர்ப்பம் தாங்கியிருக்க, அவளிடம் உண்மையை மறைத்து, அவர்களுக்கான சிகிச்சையைத் தன் பொறுப்பில் ஏற்றான் ப்ரதீபன். பூரண நலம் பெற்றவர்களை, மனைவியின் விருப்பத்திற்காக, இன்று வரவழைத்தான்.
அன்று இரவில், ப்ரதீபன் வழக்கம் போல் மடிக்கணினியைத் தலையணையில் வைத்து வேலை செய்து கொண்டிருக்க, தூக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்த வைசாலியைக் காணவும், " என்னடா, பெயின் எதுவும் இருக்கா" எனக் கணினியை ஓரம் வைத்துவிட்டு, மனைவியைக் கை நீட்டி அழைக்க, நகர்ந்து வந்தவள், அவன் நெஞ்சில் தலை வைத்து குறுக்காகப் படுத்து, அவன் கையை இழுத்து, தன் வயிற்றில் பதித்துக் கொண்டாள்.
" என்னடா" எனத் தலை கோதியவனை, " தாங்க்ஸ்" என அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், " எப்படி ப்ரதீ, எல்லாரையும் அரவணைச்சு போற" என வினவினாள். அவளுக்கு ரிடர்ன் முத்தத்தைத் தந்து சிரித்தவன்,
" அம்மாவைப் பார்த்து கத்துக்கிட்டது தான். " என்றவன், " சின்ன வயசில, எங்க தமிழ் டீச்சர் ஆத்திச்சூடி சொல்லிக் கொடுக்கும் போது "ஙப்போல் வளை " னு ஒரு சென்டன்ஸ் சொல்லி, அதற்கான விளக்கமா, ஒவ்வொரு வீட்டில் இருக்க அம்மாக்களைச் சொன்னாங்க. தமிழ் எழுத்துக்கள் எழுதும் பொழுது இந்த " ங" எழுத்து வரிசை எதுக்குடா தேவை இல்லாமல் இருக்குன்னு தோனுமாம். ஆனால் ங் ,ங மட்டுமே அதிக உபயோகத்திலிருந்தாலும், அது அந்த வர்க்கத்தையே கூட்டிட்டு வருமாம். ங எழுத்தை வளைஞ்சு பணிவை காட்டும்னும் சொல்லுவாங்க. இது இரண்டுமே எங்க அம்மாவுக்குப் பொருந்தும்,
மற்றவங்களுக்கு வளைஞ்சு கொடுத்தே, குடும்பத்தை லீட் பண்ணிட்டு போவாங்க. நம்மளும் இதை ட்ரை பண்ணலாமேன்னு தோனிச்சு. " என விளக்கம் தரவும்.
" ஆனால் நீ " ங" மாதிரி மெய் எழுத்து இல்லை, உயிரெழுத்து . உயிரா நின்னு மத்தவங்களை லீட் பண்றவன். " என அவள் புகழவும்,
" சரி விடு, உயிரும், மெய்யும் சேர்ந்த கொலாபரேசன்ல, உயிர்மெய்யை உருவாக்கிடுச்சு. எப்போ வர்றாங்கலாம் வைஷு2. O " எனவும் சட்டென வைஷுவின் இடுப்பின் மத்தியில் பளீரென மின்னல் கீற்று போல, வலி தோன்றி மறைய.
" ப்ரதீ, நீ இப்படிக் கேட்டு, கேட்டே உன் மகளைச் சீக்கிரம் வெளியே வரவச்சிருவ போல" என முகத்தைச் சுழித்தாள் வைஷு.
அடுத்த நாள் காலையில், வைஷு2. O மிஷன் கடைசி வெற்றிக்காக மருத்துவமனை நோக்கி காரில் பயணித்தனர் .
நம்மைச் சுற்றிய சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,எல்லா வற்றிலும் நன்மையை ,நேர்மறை சிந்தனை தேடி, அதற்கேற்ப ங ப்போல் வளைந்து சென்றால் , வாழ்க்கை இனிதே!
Comments
Post a Comment