எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே!

எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே! வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு , அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குட முழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி. ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில்,அவன் வீற்றிருக்க, மரங்கள் இரண்டும், இலைகளாலும், பூ,கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை, கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள். வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே , " துடியான தெய்வம்" எனப் பயபக்தியோடு கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்த...