சிந்தா- ஜீவநதியவள்
நாயகி; சிந்தாமணி,
நாயகன் ; சிங்காரவேலு.
சகாப்தம் வலை தளத்தில் , வண்ணங்கள் போட்டிக்கு, பச்சை வண்ணம் கிராமிய கதைகளுக்கான பிரிவில் எழுதியது.
லிங்க்; சிந்தா- ஜீவநதியவள் -link.
தமிழ் நாட்டில் ,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைக் கிழக்கு சீமை என அழைப்பர். மேற்குத் தொடர்ச்சி மலைகளில், பல்வேறு சிறு ஆறுகளாக உருவாகி, தேனீ மாவட்டத்தில் ஒன்றாகி வைகை என பெயர் பெற்று, வைகை நதி மதுரை மாவட்டத்தில் பாய்கிறது. இது, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாகப் பயணித்து, விளைநிலங்களை செழிப்படைய வைத்து, நேரடியாகக் கடலில் கலக்காமல் ராமநாதபுரம் பெரிய ஏரியில் முடிவடையும்.
வைகையில் அணைக் கட்டப் பட்ட பிறகு, நீர் அங்கே சிறைப்பட, இங்கே கிழக்குச் சீமை வானம் பார்த்த பூமியானது . மழை பொழிந்தால் தான், வைகையிலும் நீர், என்ற நிலை உருவானது. இது கிழக்குச் சீமை மக்களின் விவசாயத்தையும் , வாழ்வியலையும் பாதித்தது. சீமை கருவேலமரம் எங்கும் நிறைந்தது . வாழ்வாதாரமும் மாறியது. சிந்தா- ஜீவநதியவள் ,வானம் பார்த்த பூமியான அந்த மக்களின் வாழ்வியலை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதை.
கிழக்குச் சீமையின் ஒரு சிறு கிராமத்தில், பொருளாதார ஏற்ற தாழ்வு, சாதிய பாகுபாடுகள், மக்களின் புறம் பேசும் பழக்கம், ஆகியன சேர்ந்து ,ஒரு பெண்ணின் வாழ்வில் எப்படிப் பட்ட மாற்றங்களைக் கொண்டு வருகிறது,அவள் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து மீளுதல், அவளின் உதவும் குணம் என ,எளியவளான சிந்தாவை சுற்றியே புனையப்பட்ட கதை.
கிராமியம் மணம் கமழும், குதிரை எடுப்பு, செவ்வாய் பாட்டு, சீமை கருவேலமரம், சமூக ஏற்றத்தாழ்வு என நிறை விஷயங்களைப் பேசும் கதை. இந்த கதையில் உள்ள கிராமிய பாடல்கள், ராக்கு என்பவரால் பாடப்பட்டு, பதியப்பட்டவை.
சகாப்தம் வலைத் தளத்தில் , வண்ணங்கள் போட்டிக்கு, பச்சை வண்ணம் கிராமிய கதைகளுக்கான பிரிவில் எழுதப்பட்டு, முதல் பரிசை வென்ற கதை. கட்டாயம்,கிழக்கு சீமையின் ஒரு கிராமத்தில் பயணித்த உணர்வைத் தரும்.
வாசித்து விமர்சனம், நட்சத்திர குறியீடுகளையும் தாரீர்.
தீபா செண்பகம்.
விமர்சனங்கள்
விமர்சகர்; ரெனிலா ஏஞ்சலின் ராஜ்.
தீபா செண்பகத்தின் சிந்தா ஜீவ நதியவள்.
இன்று பார்ப்பது தீபா செண்பகம் எழுதிய. சிந்தா ஜீவ நதியவள்.
சிந்தா என்ற பெண்ணை சுற்றி சுற்றி வந்தாலும்
கருவேலக்காடு தான் கதையின் நாயகன் நாயகி
சீமக்கருவேலமரத்தின் தீமைகளை சொல்லி அதற்கான தீர்வையும் கதையில் புகுத்தியமைக்கு பாராட்டுகள்.
காலம் காலமாக வந்த தமிழர்களின் வாழ்க்கைமுறை தடம்மாறக்காரணம் வறுமை மற்றும் அறியாமை. இதை அழகாக உட்புகுத்தி யார்மேலும் கறைபடியாமல் நகர்த்தினாலும் நாட்டுநடப்பு தெரிவதால் கோபம் வருகிறது.
அய்யனார் கோயில் அதன் சடங்குகளை விவரித்தது அருமையாக இருந்தது.
சாதீய வேறுபாடுகளை புறந்தள்ள எடுத்துக்கொண்ட காட்சியமைப்பு பாராட்டுக்குரியது.
தீபாவின் எழுத்து எப்போழுதுமே மிக மிக நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் அருமையாகவும் இருக்கும். நிறைய கருத்துக்களை சேகரித்துதான் கதையாகக்கொடுப்பார்கள்.
இக்கதையிலும் சொல்லாடல் பாடல்களை பாடச்சொல்லி எழுதி இருக்கிறார்கள்.
கருத்து செரிவுமிக்க கதை.
வாசியுங்கள். அறிவை விசாலமாக்குங்கள் நண்பர்களே.
வாழ்த்துக்கள் தீபா செண்பகம்
*****************************************************************************
சங்கவி ப்ரியா -வாசகர்.
ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வு ..கிராமிய பாடல் அனைத்தும் அருமை.. நமக்கு தீமை செய்பவர்களாக இருப்பவர்களுக்கு நாம் தீங்கு நினைக்காது நன்மை செய்ய வேண்டும் ..என்பது இக்கதையின் உணர்த்துகின்றது ....சிந்தா கதாபாத்திரம் super ...அருமையான கதை. மனம் கவர்ந்த விசயம் என்றால் சிந்தாவின் செயல்கள்...சீமை கருவேலமர ஓழிப்பு விழிப்புணர்வு...
Comments
Post a Comment