தளிர் மனம் யாரைத் தேடுதோ
தளிர் மனம் யாரைத் தேடுதோ
இது எனது இரண்டாவது நாவல் .
இரட்டை குழந்தைகளோடு தனித்திருக்கும் இளம் மருத்துவரின் கதை.
தனக்கு குழந்தைகள் இருப்பதையே அறியாத நாயகன் ஆதித்யனின் கதை.
தளிர் மனங்களான , அநி, ஆது தந்தையை எதிர் நோக்கி காத்திருக்கும் கதை.
நாயகன் ; ஆதித்ய ராஜன்.
நாயகி ; திவ்யவர்ஷினி
புதுக்கோட்டை , தஞ்சாவூர், கொடைக்கானல், தாண்டிக்குடி, மதுரை என பயணிக்கும் கதை.
அமேசான் கிண்டலிலும், ப்ரதிலிபி யிலும் உள்ளது.
தளிர் மனம் யாரைத் தேடுதோ -கிண்டில் திரி
கதைக்கு வந்த விமர்சனங்கள்.
நூலின் தலைப்பு
தளிர் மனம் யாரைத் தேடுதோ!
ஆசிரியர்: தீபா செண்பகம்
கதை நீண்டதாக இருந்ததால் வாசித்து முடித்து விமர்சனம் தருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். ஆனாலும் படித்து முடித்து சுடச்சுட விமர்சனம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வளவு நீண்ட கதையைத் திறமையாகத் தெளிவாக எழுதிய ஆசிரியருக்கு எனது பாராட்டுகள்.
ஆதித்யராஜன் என்ற ஆதித்யா , திவ்யவர்ஷினி என்ற திவ்யா இருவரின் காதல் கதை. நடுவில் வரும் குழப்பங்கள்.
திவ்யாவின் பெற்றோர் விஜயராகவன், கார்த்திகைச் செல்வி இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொண்டு உறவினர்களை விட்டு விலகித் தாண்டிக்குடி எஸ்டேட்டில் வந்து வசிப்பவர்கள். அவர்களுடைய ஒரே மகள் திவ்யா மருத்துவ மாணவி. ஆதித்யாவை திவ்யா சந்திக்கும் நிகழ்ச்சியை அழகாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.
திருமணத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் கதை நகரும் போது திடீர்த் திருப்பம். காதலர்கள் பிரிகிறார்கள். திவ்யாவின் பெற்றோர் விபத்தில் இறந்து போகிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதியின் தம்பி இன்பா, புதுக்கோட்டைக்கு அருகேயிருக்கும் உறவினர் வீட்டிற்குச் செல்லும் போது ஆதி, அநி என்ற அழகான இரட்டைக் குழந்தைகளுடன் வசிக்கும் டாக்டர்.திவ்யாவைச் சந்திக்கிறான். கனகரத்தினத்தின் ஃபேக்டரியில் ஊழியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக திவ்யா பணியாற்றுகிறாள். குழந்தைகளின் ஜாடையை வைத்து ஓரளவு ஊகித்துத் தன் அண்ணனிடம் இன்பா செய்தியைத் தெரிவிக்க, ஆதித்யா வந்து திவ்யாவின் வாழ்வில் மீண்டும் நுழைகிறான்.
திவ்யா, ஆதித்யாவை வெறுக்கும் காரணம் என்ன? திருமணம் ஆகாமலேயே பெற்ற குழந்தைகளுடன் வெளிநாடு செல்ல திவ்யா ஏன் விருபம்புகிறாள்? தொழிலாளர்களின் நலனைக் கருதிப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தண்டிக்க எண்ணும் திவ்யா எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கின்றனவா? என்றெல்லாம் தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.
டாக்டர் தம்பதியான சேதுமாதவன், தேவகியின் அன்பும் ஆதரவும் திவ்யாவிற்குக் கிடைப்பது நெகிழ்வான விஷயம்.
சௌந்தரராகவன் ஜமீன்தார் குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள் கதைக்குப் பின்னணியாகவும் கதையின் திருப்பங்களைத் தரவும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அங்கை , மங்கை , ஈகைச் செல்வி என்று வகை வகையான அழகான தமிழ்ப் பெயர்கள் இனிமை.
திவ்யாவின் பெற்றோர்க்கு நேர்ந்த விபத்தில் உறவுகள் மீது எழும் சந்தேகம் சரிதானா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். திவ்யாவின் பெற்றோர் சந்தித்த விபத்து சதிச்செயலா இல்லையா என்ற முடிச்சு கடைசி வரை ஸஸ்பென்ஸாகவே செல்கிறது.
சொர்ணம் அழுத்தமான கதாபாத்திரம்.
ஆதியின் உடன்பிறப்பான அன்பின் காலில் விபத்தின் காரணமாக அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திவ்யா அவனுக்கு உதவுகிறாள். ஆதியின் குடும்பத்தினருக்கு அதனால் திவ்யாவின் மீது மதிப்பு கூடுகிறது.
அன்பு, புவனாவின் இனிய இல்லறம், இன்பா, ராஜியின் காதல் இரண்டுமே கதையில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்கின்றன.
சில எழுத்துப் பிழைகள் கண்களில் பட்டன. அவற்றையும் தவிர்த்தால் கதை இன்னமும் சிறக்கும். அடுத்ததாக நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால் பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது கடினமாக இருந்தது.
இந்தக் கதையை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கலாமோ என்று மனதில் தோன்றியது.
ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். நிறையக் கதைகளை எழுதி இரசிகர்களின் மனதை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
புவனா சந்திரசேகரன்,
30/01/2021
Comments
Post a Comment