எல்லாம் புதியவை
எல்லாம் புதியவை!
மொட்டிலிருந்து விரியும் மலர்
மிதமாய் விழுந்த பனித்துளி
நாசி நுகரும் காபி மணம்
பொங்கி வழிந்த சாதம்
கொதித்து அடங்கும் குழம்பு
உண்டு மகிழ்ந்த ருசி
பாதம் சுட்ட சூடு
வீதி வலம் வரும் பசுவின் குரல்
அந்தியில் மலர்ந்த மல்லிகை
புவியிலிருந்து புறப்பட்ட நீர்
தழுவிச் சென்ற தென்றல்
முதல் முறைக் கேட்ட பாடல்
கண்ணில் விரிந்த காட்சிகள்
உருத்து விழித்த
மொட்டென மலர்ந்த பாசம்
அதில்
உமிழ் நீர் சுரந்த தாகம்
அமிழ்தாய் அதை அணைத்த தண்ணீர்
இதுவரைக் காணா
இதுவரை
அதிர்ச்சி தந்த கனங்கள்
மகிழ்ச்சி தரும் மணிகள்
உடல் தரும் உபாதைகள்
மருந்தாய் வரும் மந்திரங்கள்
வியக்க வைக்கும் வினாக்கள்
அசர வைக்கும் விடைகள்
தமிழாய் வந்த வார்த்தை
தன்னில் பதிந்த சொல்லை
உள்ளபடி உரைக்க வைத்த சிந்தை
உளறலாய் வரும் உவகை
ஓராயிரம் உண்டு புதிதாய்
எல்லாம் என்றும் அனுபவித்தவை
எல்லாம் என்றும் புதியவை
அன்றே மலர்ந்தவை
அக்கணமே ஜனித்தவை
ஆகவே எல்லாம் புதியவை !
ஆகவே எல்லாம் புதியவை !
Comments
Post a Comment