மணிக்குயில்- கவிதைச் சரம்-2

    மணிக்குயில்- கவிதைச் சரம்-2


ஆவி துடிக்குதடி!


பொக்கை வாய் காட்டி சிரித்த- பூஞ்சிட்டை,

தாவிப் பாய்ந்து அடம்பிடித்த- பூந்தளிரை 

யானையாக்கி சவாரி செய்த -பூங்கொடியை 

மாமன் மகளெனவே மடி சுமந்த-பூந்தாரையை 

குழந்தையெனவே கொஞ்சி குழவிய -பூமயிலை 

மஞ்சள் பூசி மலர்ந்து நின்ற -பூவிழியாளை 

கண்ட நாள் முதலாய் … 

கவிதைச் சொல்லிக் கட்டியணைக்க 

ஆவி துடிக்குதடி !


2.அரையாடையில் அள்ளிக் கொஞ்சிய  பதுமையை 

பட்டுச் சொக்காய் உடுத்தி பறந்து திரிந்தவளை 

உரிமையாய் அதட்டி மிரட்டி தூக்கிச் சுமந்தவளை 

பாவாடை தாவணியில் பார்த்த நாள் முதலாய்…

என்னுள் பருவ மாற்றம். 

காணாமல் காண. 

மௌனமாய் சீண்ட 

பார்வையாள் தொடர 

கள்ளமாய் ரசிக்க 

ஆவி துடிக்குதடி !


3.உன்னை தூக்கிச் சுமக்கவும், 

கூட்டிச் செல்லவும் 

மாமன் நானிருக்கையில் 

மிதிவண்டி உனக்கெதுக்கு 

பூங்குயிலே!

மிதிவண்டி  மிதித்து - நீ 

பழகும் முன்னே , 

சறுக்கி விழுந்து, சதை பெயர்ந்து 

இரத்தக் கரையோடு- நீ 

விக்கி அழுகையில் ,

நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொல்ல 

ஆவி துடிக்குதடி !


4.தலைக் குளித்து தளரப் பின்னலிட்டு 

மயக்கும் மல்லிகைச் சூடி 

மங்கை நீ பேருந்தில் பயணிக்க

மெய்காவலனாய் பக்கவாட்டில் 

பின் தொடர்ந்தேன். 

பாவையுனை பார்க்கும் 

படுபாவி பயல்களை கண்டவுடன் , 

அவர்கள் கண்ணிரெண்டை தோண்டி 

கையில் கொடுக்க 

ஆவி துடிக்குதடி! 


கிணற்று நீரை ஆற்று வெள்ளம் தீண்டாது. 

எனக்கான பெண்ணவளை யாரும்

நெருங்க இயலாது - என 

அனுதினமும் காவலாய் காத்த உன்னை, 

என்னவளாய் ஆக்கிக் கொள்ள 

தருணம் பார்த்திருக்க 

என் தம்பிக்கே உனை 

பரிசம் போட்ட செய்தி கேட்டு 

ஆவி துடிக்குதடி!


என்னவள், 

எனக்காகப் பிறந்தவள் 

நான் தூக்கி வளர்த்தவள்

நான் கட்டிய குச்சில் புகுந்தவள் 

நான் காவல் காத்த மயிலவள் 

என் பூங்குயிலவள். 

தம்பி மனைவியாய் எப்படி 

கற்பனையிலும் காண இயலா 

காட்சியது. 

செய்தி கேட்ட நேரமுதல் 

இது பொய்யாகி போகாதோ என 

ஒரு வார்த்தைக் கேட்க என். 

ஆவி துடிக்குதடி! 


வீதி வழி வந்தப் பாவையை 

விதி வழிச் சென்று வழி மறைத்தேன். 

அதிர்ந்து உரைந்து நின்றவளிடம் 

எனை மணமுடிக்க கையேந்தி கேட்டு நின்றேன். 

வழி மறைத்து, கைப் பிடித்து என் காதல் சொல்ல,

தம்பி பொண்டாட்டி கை பிடித்து வழி மறைப்பாயோ - என 

திரவாகமாய் வீசிய வார்த்தைக் கேட்டு 

உனை சுமந்த என் நெஞ்சு வெடித்து

ஆவி துடிக்குதடி!


ஒரு நொடி அவளை கடத்தலாமா, 

களவாடலாமா, கடமை தவறலாமா 

கயமையானாலும் கைப்பற்றலாமா 

சிந்தனை தறிக் கெட்டு ஓடியது.  

ஆயினும் சுடும் கண்களோடு நோக்கும் அவளை 

அழும் கண்களோடு பார்க்க இயலாதென 


ஆவி துடிக்குதடி!


மாற்றானோடு மணக் கோலத்தில் 

அவளை காண சகியாதென 

உள்ளம் சொல்ல, 

உற்றார் தடுக்க 

தாயைப் பிரிந்தேன்

வீடு துறந்தேன் 

 நாடு கடந்தேன். 

ஆயினும் ஒரு கணம் 

உனை நினைக்கையில் 

உடல் நடுங்க என் 

ஆவி துடிக்குதடி !


Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே