காற்றாக நானும்
காற்றாக நானும்
காற்றாக நான் இருந்தேனா!
தேகம் நுழையா இடம் காண
வதனம் அடையா மேடு ஏற
கால் சுவடு இல்லா வனம் நாட!
காற்றாக நான் இருந்தேனா
அலைகடல் மேல் தவழ்ந்திட
மலை முகடுகளைக் கடந்திடப்
பனிச் சிகரத்தில் உறைந்திட !
காற்றாக நான் இருந்தேனா
ஆகாயத்தில் பரவி நிறைந்திட
அம்புலியோடு விளையாடிடத்
தாரகைகளுடன் கதைத்திட!
காற்றாக நான் இருந்தேனா
மரங்களை ஆட்டுவித்து மகிழ
வயல் வழியூடாக தவழ்ந்திட
மூங்கில் துளை இசையாகிட!
காற்றாக நான் இருந்தேனா
மெல்லியால் இடை சுற்றிடக்
காதலன் தூதனாய் சென்றிடத்
தென்றலாய் மகிழ்ந்து குலாவிட!
காற்றாக நான் இருந்தேனா
புயலாய் மாறி புவி புரட்டிட
மழையை வாரி வருசித்திட
ஊழிக் காற்றாய் உலகழித்திட !
காற்றாய் நான் இருந்தேனா
கடந்த பாதை அறிந்திடோம்
கடக்கும் காலம் கடந்த பின்னே
காற்றாய் நான் இருப்பேனா?
Comments
Post a Comment