எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே!

 

எங்க ஊரு, எங்க சாமி ! நீ உள்ள வராதே! 



வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு , அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குட முழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி.  


ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில்,அவன் வீற்றிருக்க,  மரங்கள் இரண்டும்,  இலைகளாலும், பூ,கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை,  கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.


வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே , " துடியான தெய்வம்" எனப் பயபக்தியோடு  கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்துப் பேச்சிக்கு, ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீடு போல், கருப்பன் கோவிலும் ஒரு வீடு தான் தாத்தா, முத்துச்சாமி போல், கருப்பண்ணச்சாமியும் அவளுக்குப் பூட்டன் முறை. அப்படிப் பாவித்துத் தான், அந்தத் தெய்வங்களிடம், உரிமை பாரட்டுவாள். 


" கூறு கெட்ட மனுசன், தலைபிரட்டு புடிச்சு அலையுது. யாருகிட்ட, என்ன பேசுறோமுன்னு, மட்டு மருவாதை இருக்கா. நாலு எழுத்து படிச்சு, கூட்டத்தில பேசிட்டா பெரிய ஆளாக்கும். இவுகளுக்குச் சப்போர்ட்டு பண்றதுக்கும், கை தட்டி துண்டு போர்த்தறதுக்கும் நாலு அல்லக்கை வேற . ஐயா, கருப்பா நீ தான் அவுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்" என வேலையைப் பார்த்துக் கொண்டே, தன் புலம்பலையே வேண்டுதலாக்கி கருப்பனிடம் முறையிட்டாள் முத்துப்பேச்சி. 


ஆனால் கருப்பண்ணசாமி அவள் வேண்டுதல் கேட்டும்  ஆனந்தமாகவே, அவளது தாத்தா முத்துசாமியைப் போல் சிரித்துக் கொண்டிருக்க “ யார், ஏசினாலும், பேசினாலும் நீயும், உன்னை சாமியாடுற  என் தாத்தாவும், ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டு அப்படியே நில்லுங்க” என்றாள். கருப்பன், தன்னோடு சேர்த்து அவர் பக்தனுக்கும் பேத்தியிடம், பேச்சு வாங்கிக் கொடுத்தார்.


“ஏண்டி நீ மட்டும் , கருப்பனை வையலாமாக்கும்” எனச் சாப்பாடு கூடையோடு வந்த, அவளது அம்மாச்சி பவளாயி கேட்க,


“நான் பேசுறதும்,அவுக பேசறதும் ஒண்ணா. அந்தாளு புத்தியில்லாத பேசுது, நான் அதுக்குப் புத்தியைக் கொடுக்கச் சொல்லி  கருப்பனை வேண்டுறேன்” என அவள் வார்த்தையாட, “ஏசினாலும், பேசினாலும் அப்படியே நிக்கிறாகன்னு, யாரைச் சொன்ன”எனக் கிழவி கிடுக்கி பிடி போட,


“ அது இவரையும், இவரைத் தாங்கி ஆடுற உன் புருஷனையும் தான். பூசை வச்சு, மணி அடிச்சுக் கூப்பிடையில் மட்டும், ஆக்ரோஷமா இறங்குறது. மத்த நேரம், ஒண்ணும் நடக்காத மாதிரி தான நிக்கிறாரு. ஒருக்கா, இவர் சுய ரூபத்தைக் காட்டினா, பேசறவனுங்க நாக்கு மேலன்னத்தில ஓட்டிக்காது, அப்புறம் எப்படிச் சாமி, இருக்கு இல்லைனு பேசுவாங்க” என அவள் விடாமல் யாரையோ வறுத்தெடுத்துக்க, பொங்கல் வைக்கும் கட்டாந் தரையில் சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு, பேத்தியைப் பார்த்த பவளாயி,


“ இப்ப யாருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி வேண்டிக்கிட்டு இருக்கவ” என்றார். 


“எல்லாம் நீ வளர்த்து விட்ட, கோயில் காளை ஒன்னு, யாருக்கும் அடங்காமத் திரியுதே, உன் கொழுந்தன் மகன், அதுக்குத்தான் “ என அவள் நொடிக்க,


“உனக்குப் பரிசம் போட்ட, என் மவன் ராசப்பாவ சொல்றியாக்கும், அவனைத்தான், ஜில்லாவுலையே , பெரிய அறிவாளி, புரட்சி புயல்னு , கருப்புச் சட்டை, சிவப்புச் சட்டையெல்லாம் புகழுது, நீ என்னண்டா, அவனுக்கே புத்தி கொடுக்கச் சொல்லி வேண்டுறவ.ஒரு வேளை , நீ வேண்டிக்கிறதால தான், அவனுக்கு அம்புட்டு அறிவோ என்னமோ “ எனப் பவளாயி நக்கலாகச் சிரித்தார்

அவரை முறைத்து விட்டு , “நம்ம சாமி, அவருக்கு அறிவை கொடுத்திருந்தா , அதைத் தூக்கி ஆடுற, என் தாத்தனையே, எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்குமா. அகராதி திண்ட ,அந்த மனுஷனைப் பத்தி , இனிமே நாம பேச வேண்டாம் அம்மாச்சி, இத்தோட, அவுக சம்பந்தப் பட்ட விஷயத்தை எல்லாம் முடிச்சுக்குவோம், அவுக சங்காதமே வேண்டாம் “ என அவள் வேலையைத் தொடர்ந்தாள்.


“அதென்னடி, அப்படிச் சொல்லிபுட்ட, ஊரோட வந்து உனக்குப் பரிசம் போட்டுப் போயிருக்கான், ஐப்பசி பொறக்கவும் கல்யாணம் கட்ட போறவனோட , சங்காதம் வச்சுக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தமுன்னேன்.”


“ அந்த நினைப்பு இருந்தா, சாமியாடியான என் தாத்தாகிட்டையே , ஊருக்கு நடுவுல வச்சு, சாமியுமில்லை, பூதமும்மில்லைனு தர்க்கம் பண்ணியிருக்குமா, அவுக சம்மதம் நமக்கு ஒத்து வராது” என அவள் பேச்சை வெட்ட,


“ அவன் நல்லவன், உன்னை வச்சு நல்லா பொழைப்பான்னு, உன் தாத்தனே, இந்தக் கருப்பன் கிட்ட உத்தரவு வாங்கிப் பேசி முடிச்சாரு, எனக்குத் தெரியாதுத்தா, நீயாச்சு உன் தாத்தாவாச்சு , இந்தக் கருப்பனாச்சு , நீங்களே பேசி முடிவுக்கு வாங்க” எனப் பவளாயி கணவன் வரும் வழியைப் பார்த்தார்.


வயல் வேலையை முடித்து, முத்து சாமி பம்ப்செட்டில் கைகால்களைக் கழுவி கொண்டு, “கருப்பா, எல்லாரையும் நல்லா வை “ என வேண்டியபடி, சன்னதியில் விழுந்து, விபூதியைப் பட்டையாய் அடித்துக் கொண்டு மனைவியும், பேத்தியும் இருக்குமிடம் வந்தமர்ந்தார்.


கோவிலைச் சுற்றியுள்ள வயல்கள், முத்துசாமியின் பொறுப்பு, அதில் இரண்டு ஏக்கர் இவர் பங்கு எனில் மீதமுள்ள, பத்து ஏக்கர் பங்காளிகளுடையது, மற்றவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து விட்டு, பாட்டாளிகளுக்குக் கூலி கொடுத்து , கருப்பனுக்குப் போக, மீதியில் இவர் குடும்பம் வயிற்றை நிறைத்துக் கொள்ளும்.


“ என்னா விஷயம், அம்மாச்சியும் பேத்தியும் கருப்பனையும், பேச்சிலே இழுத்து பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க” என முத்துசாமி கேள்வி எழுப்ப, ஒரு தூக்கு போணியை அவர் புறம் நகர்த்திய, பவளாயி, பேத்தி நறுக்கி வைத்திருந்த வாழை இலையில் வெஞ்சனத்தை வைத்து நீட்டி விட்டு, பேத்தியின் அங்கலாய்ப்பையும் சொன்னார்.


அதைக் கேட்டு ஹாஹாவெனச் சிரித்தவர் “ ஏத்தா சின்னப் பயலுக, அறியாமைல பேசுறதுக்கெல்லாம், மனுஷ கழுதையாட்டம், கருப்பனும் , அருவாளை தூக்கணும்னா எப்படி? நிண்டு ,நம்மையே ஆள்றது தான் சாமி. அதது, அவரவர் பக்குவதில தான் உணர முடியும்” என்றவர் “கோபமில்லாத, கருப்பன் படியளந்ததைச் சாப்பிடு, வயித்தோட மனசும் குளிர்ந்து போகும்” எனத் தேற்றியவருக்குப் பேத்தியின் கோபத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றாமை புரியாமல் இல்லை.


முத்துச்சாமிக்கு, விவசாயம் முதல், நாட்டு நடப்பு வரை அத்தனையும் அத்துப்படி. ஊருக்கே யோசனை சொல்லும் சிறந்த மனிதன். அவர் ஒரு வாக்குச் சொன்னால், அது கருப்பன் வாக்கு என்றே, ஊர் மக்கள் சிரம் தாழ்ந்து கேட்பார்கள். அவர் தெய்வ சன்னிதியில் சந்ததம் வந்து, கருப்பனைத் தாங்கி ஆடும் போது, ஊர் சனமே அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கும். அந்த நேரம், வழங்கப்படும் திருநீற்றை, கருப்பனே வந்து தருவதாகவும், வருடம் ஒரு முறை அவன் ஆசி பெற்றாலும் போதும், எந்த நோய் நொடியும், தீவினைகளும் தங்களை அண்டாது என்பது கிராம மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.


தெய்வ நம்பிக்கை மிகுந்த அவரது குடும்பத்தில் தான், நாத்திகம் பேசும் மூன்றாம் பங்காளியின் வாரிசு ராசப்பாவும் இருந்தான். பெரியப்பாவோடு, மற்ற விசயங்களில் ஒத்துப் போகும் ராசப்பா, இந்த விசயத்தில் மட்டும் தர்க்கம் செய்து எதிர்த்துத் தான் நிற்பான். ஆனால் தன்னைப் போலவே, உடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, அம்மாவையும் பேணும் அவன் குணத்திலும், அவன் உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, பேத்தியை அவனுக்குக் கட்டித் தர சம்மததித்திருந்தார் முத்துச்சாமி. 


ஊரின் நடுவிலிருக்கும் டிக்கடையில் தான், காரசாரமான எல்லா விவாதங்களும் ஓடும். மூன்று நாட்களுக்கு முன், " ராசப்பா, பௌர்ணமி பூசை வருது. கோவில்ல இரண்டு நாளைக்கு, குழாயைக் கட்டி விடு. ஊர் பூரா கருப்பன் பாட்டு கேக்கட்டும் " என அவர், முன்பணத்தை  நீட்ட, அதை வாங்க மறுத்தவன்,


" கருப்பனுக்கு, கருப்பனுக்குனு, உழைச்ச காசை எல்லாம் அங்கயே கொண்டு போய்க் கொட்டுங்க. விளைச்சலையும் பங்காளிகளுக்குப் பங்கு வச்சிடுறீங்க . எவன்கிட்டையும் கோயில் வரி வாங்கிறதும் கிடையாது, கருப்பன் உங்களைக் காப்பாத்துறானா, இல்லை நீங்க கருப்பனை காப்பாத்துறீங்களான்னு தெரியலை.." என பேச்சை ஆரம்பிக்க, 


" எல்லாருக்கும் படியளக்கிறதே, அவன் தான். அவனுக்கு நாம படியளக்க முடியுமா. இதையெல்லாம் புரிஞ்சுகிற பக்குவம் உனக்குக் கிடையாது. விடுய்யா"  என்றார் பெரியவர். 


" புரிஞ்சுக்கிற மாதிரி, எடுத்துச் சொல்லுங்க. நீங்களும் உங்க வயசுக்கு, எழுபது வருசமா, உங்க சாமிக்குச் சேவகம் பண்றீங்க. கஷ்டத்தைத் தவிர அந்தச் சாமி என்ன கொடுத்துச்சு? கைகாலை முடக்கி போட்ட ஒரு மகனை கொடுத்துச்சு, காலம் பூரா, உங்க மகன் சின்ன கருப்பனை தூக்கி சுமந்திங்க, அவனும் அல்ப ஆய்ஸ்ல போயிட்டான். சரி ராக்கம்மா அக்களாவது நல்லா வாழ்ந்துச்சா, முதல்பிரசவத்துலையே அதுவும் போய் சேர்த்துடுச்சு, வயசான காலத்துல பேத்தியை காவல் காத்துகிட்டு திரியிறீங்க  " என அவர், வாழ்வை வரிசையாய் பட்டியலிட்டு, சாமியே இல்லை என விதண்டாவாதம் பேசினான். 


“ராசப்பா , எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையில தான் இருக்கு, என் மகன் ஊனமா தான் பொறந்தான், நான் இல்லைங்கல , ஆனால் அவனை சுமக்க உடம்புலையும், மனசுலையும்  வலுவ கொடுத்தது என் கருப்பன் தான். அவன் என் வினைப்பயனை முடிக்க, எனக்கு வரமா வந்தவன். மகளும் அதே தான். ஆனால் போக கூடாத வயசில போனாலும், எங்க பிடிமானத்துக்கு பேத்தியை கொடுத்துட்டு போயிருக்கா, அவளை கட்டிக்க நல்ல மனசுக்காரன் நீ வந்துட்ட, நீ என்னை தூக்கி போடாதையா போயிடுவ” என அதே விஷயத்தை தன பார்வையில் சொன்னார். 


ஆனால், அதை அப்படியே ஒத்துக் கொண்டால், அவனெப்படி புரட்சியாளன், ஊர், நாட்டு நடப்பை இழுத்துப் பேசி, கடவுள் மறுப்பை அவன் ஆணித்தனமாக எடுத்து வைக்க, முத்துச்சாமி அமைதியானார். ஆனால் அவர் சார்பாகக் கிராம மக்கள், தங்கள் அறிவுக்கு எட்டிய தூரம், கடவுளைத் தாங்கிப் பேசினர். ராசப்பா பக்கமும், இளவட்டங்கள் பேசினர்


இந்த விசயம், ஊருக்குள், சாமியாடியை , அவர் தம்பி மகன் எதிர்த்திட்டான் என அவரவர் புனைவு, பிறசேர்க்கை எல்லாம் சேர்த்துச் சொல்ல, விசயம் ஊருக்குள் பரவி முத்துபேச்சி காதுக்கும் சென்றது. 


ராசப்பா, நல்ல உழைப்பாளி. கொட்டகை, பாத்திரங்கள் முதல் , விசேசங்களுக்குத் தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்திருக்கிறான், நல்ல வருமானம். முத்துச்சாமியை காட்டிலும், அதிகம் அடிபட்டதாலும், சுயமரியாதை கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்க் என மைக் செட் அமைக்கும் வேலைக்கு போனவன், அவர்கள் பேச்சைச் செவி மடுத்து, இரண்டுக்கும் பொதுவாக, தனக்கென ஓர் கொள்கையை உருவாக்கிக் கொண்டான்.


போன மாதம் தான் முத்து பேச்சிக்குப் பரிசம் போட்டுச் சென்றான். அது முதல், அங்கங்கே அவளைப் பார்க்கும் நேரமெல்லாம், ஜாடையாய் பேசி, தன பிரியத்தை அவன் உணர்த்த, அவளுக்குள்ளும் பூ மலர்ந்தது. ஆனால் இயல்பாகவே அவன் பேச்சில் வரும், இறை மறுப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் தன் தாத்தாவிடம் தர்க்கம் செய்ததில் ஏகத்துக்கும் கடுப்பு.


நாளை பௌர்ணமி பூஜை, எல்லாருக்கும் வழி காட்டும் இந்தத் தெய்வம், தனக்கும் நல்ல வழியைக் காட்டட்டும் என மனதில் மருகி நிற்க,


" ஆத்தா பேச்சியம்மா, ரசாப்பா, ஆளுங்க, குழா கட்ட வருவானுங்க. இந்தத் தரம் கொஞ்சம், உச்சக்க ஏத்திக் கட்டச் சொல்லு. நாளைக்குப் பூசைக்கு அன்னதானம் யாரோ கொடுக்குறோமுன்னு சொன்னாகளாம், யார் என்னனு ப்ரசிடெண்டைவிசாரிச்சிட்டு வந்துடுறேன்” என அவர் கிளம்ப ,


"அந்தாள விட்டா, உங்களுக்கு வேற மைக் செட்டே கிடைக்கலையாக்கும்" என நொடித்த பேத்தியைப் பார்த்து, ஓர் சிரிப்பை மட்டும் உதிர்த்துச் சென்றார்.


பௌர்ணமி அன்று, காலையிலிருந்தே ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, சாமியை வணங்கிச் சென்றனர். இன்று கோவிலில், முத்துசாமி குடும்பம் மட்டுமின்றி, மற்ற பூசாரி, பங்காளி குடும்பங்களும், கருப்பனுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருந்தனர்.


உச்சி காலப் பூஜையில், ஆலய மணி முழங்க, தூப தீபம், பூக்களின் நறுமணம் அவ்விடத்தை நிறைக்க, எழில் கொஞ்சும் பசுமையோடு பூலோக கைலாயம் போல் கோவிலே தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தது. ஆனந்தரூபனாய், அருள் பாலிக்கும் கருப்பன், கோவில் மணியடித்து, பக்தர்கள் சரணங்களை முழங்க  ஆக்ரோஷமாய் முத்துசாமி மேல் இறங்கினான். நாக்கை துருத்தி, கண்ணை மலர்த்தி, செவ்வெறி ஓடிய சிலிர்ப்புடன், அருவாளை ஏந்தி சன்னதி முன் ஆட்டம் ஆடியவன், தன் முன் மண்டியிட்டு விழும் பக்தருக்கெல்லாம், அருளாசி வழங்கினான். கண்ணீர் மல்க கதறியவர்களுக்கு, நல்வாக்குத் தந்தான்.


முத்துப்பேச்சி, கருப்பனாகிய தாத்தன் முன் மனக்குறையோடு மண்டியிட, பவளாயி, “அவள் மனச் சஞ்சலத்தைத் தீர்த்து வைங்க” எனவும், ஓர் அட்டகாசமான சிரிப்போடு, “உன் மனசு குளிர,மனை அமையும்” என ஆசிர்வதித்தார். 


ஊர் ப்ரசிடெண்ட்டிலிருந்து ,காவிசட்டையிலிருந்த வெளியூர்காரர்கள் வரை பயபக்தியோடு வணங்கி நின்றனர். கருப்பன், அனைவருக்கும் அருளாசி வழங்கி மலை ஏறினார். சூட தீபாராதனை காட்டப்பட்டது.


அன்று முழுவதும், ஊர் மக்கள் அங்குத் தான் குடியிருந்தனர், பெரும் புள்ளி ஒருவர், அன்னதானம் வழங்கினார், மற்றொருவர் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தார். சிலர் புதிதாகக் கோரிக்கை வைக்க வர, சிலர் நிறைவேறிய கோரிக்கைக்காகக் காணிக்கை செலுத்த வந்தனர். a


மதியத்துக்கு மேல் கூட்டம் குறையவும், பிரசிடெண்ட் அழைத்து வந்த காவி சட்டை, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ,தான் இருக்கும் அமைப்பைப் பற்றியும், இந்தக் கோவிகளைப் பாதுகாத்து,  கருப்பனின்  அருளை வெளியுலகுக்கு பிரபலப்படுத்தும்  யோசனையும்  சொன்னார். அதன் மூலம் பக்தியையும், மதத்தையும் வளர்க்கலாம் என்றார். தங்கள் அமைப்பை, கட்சியின் செல்வாக்கைப் பற்றி அடுக்கியவர் கடைசியில் முத்துசாமியை தங்கள் அரசியல் கட்சியில் சேரச்சொல்லி வலியுறுத்தினார்.


“நம்ம கட்சியில் சேர்ந்துட்டீங்கன்னா, மத்த மதத்துக்காரங்க உங்களை எதிர்க்கத் துணிய மாட்டாங்க. நம்ம மதத்திலிருந்து ,மதம் மாறுவதைத் தடுக்கலாம். நாத்திக கூட்டம், உங்களை ஒரு வார்த்தை பேசும் முன்ன யோசிப்பாக. நீங்க தனி ஆளா இருக்கப் போய்த் தானே, உங்க சொந்தக்காரன், ஊர் மத்தியில் உங்களை அசிங்க படுத்தியிருக்கான். இனிமே அதெல்லாம் நடக்காது, நாங்க உங்களுக்குத் துணையா இருப்போம், பேசுறவனுக்கு, நம்ம சாமி, அங்கேயே தண்டனை தருவார், அவன் பல் உடையும்” என முத்துசாமியை மூளைச் சலவை செய்து கொண்டிருக்க, அம்மாச்சியும், பேத்தியும் தூரத்திலிருந்த பார்த்துக் கொண்டே இருந்தனர்.


 மைக் செட்டை அவிழ்க்க, ராசப்பவே வந்தான், நேற்றே அவன் எடுபிடி  சீனி, குழாய் கட்ட வந்தவன் முத்து பேச்சியின் வாயை பிடுங்கி , அவளது மனத்தாங்கலை, கேட்டு அறிந்து, “ நயன்டிஸ் கிட்ஸ்சுக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது அண்ணன், உனக்கு மேடையில் பேசுற அளவுக்கு, வீடு விவகாரத்தில் விவரம் பாத்ததுன்னேன், மதனிகிட்ட அடங்கிப் போ , அப்பத்தான், அது உன்னைக் கட்டும். அதை விட்டு, அவுக தாத்தா, சாமியாடிகிட்டையே போய் ஒரண்டை இழுத்துகிட்டு இருக்க” என அறிவுரை வழங்க, 


“பொடிப்பய, நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்ட” என  முறைத்தவன், 'காவி கூட்டமெல்லாம், உள்ள வர்றது இந்த ஊருக்கு நல்லதில்லை, அதுக்காகவாவது, நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்' என வந்து சேர்ந்தான்.


பவளாயி, அவனை வரவேற்றுச் சாப்பிடச் சொல்ல, முத்துப் பேச்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு அம்மன் பீடத்துக்கு அருகில் சென்று நின்று கொண்டாள் , அவன் தான் அங்கு வரமாட்டானே!


ராசப்பாவை பார்க்கவும், காவி சட்டை கொஞ்சம் ஸ்ருதியைக் குறைத்து, “சரிங்க ஐயா, நாளைக்குப் பார்ப்போம், இப்ப நீங்களும் ,கருப்பனும்  எனக்கு ,உத்தரவு கொடுங்க” எனக் கையைக் கூப்ப.


“இருங்க தம்பி, கருப்பனை கும்பிட வந்துட்டு, சும்மா போகலாமா” என்றவர், ராசப்பாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கருப்பன் சன்னதிக்குச் சென்று, நறநறவென இருந்த சாம்பல் விபூதியை, தன் நெற்றியிலும், உடலிலும் பட்டையாக அடித்துக் கொண்டு வந்து தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றார்.


“இது, எங்க ஊரு, எங்க சாமி. நாங்க பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து, இந்த வயல் வெளியில் வச்சு, அவனைக் கும்பிட்டு வர்றோம். காவி சட்டைக்காரன் சொல்லித் தான், நாங்க எங்க சாமியை கும்புடணுங்கிறதும் இல்லை, கருப்பு சட்டைக்காரன் சொல்லி, அவனை மறுக்கணும்கிறதும் இல்லை. எவன் வந்தாலும், போனாலும், சொன்னாலும் சொல்லைனாலும், எங்க அப்பனை ஆத்தாளை , நாங்க கும்பிடத் தான் செய்வோம்.


நாட்டில் நடுக்கிற அக்கிரமத்தையெல்லாம் பட்டியல் போட்டு, உங்க சாமி இருக்கா, இருந்தா இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு கருப்பு சட்டைகாரன் கேட்கிறான். அவனுங்களுக்குப் பதில் சொல்ல, காவி சட்டைக்காரன் கச்சை கட்டிட்டு இறங்குறீங்க.


'தீதும், நன்றும் பிறர் தர வாரா', நம்ம செஞ்ச தப்பு தான், நமக்குத் தண்டனையா வரும், அந்தத் தப்பு எப்போ செஞ்சேன்னு கேட்காத, அப்பாவியா இருக்கச் சின்னப் பிள்ளைகளைக் கூடச் சீரழியுதுங்களேன்னு கேட்டுத் தர்க்கம் பண்ணாதே , எந்தச் ஜென்மத்துல , எந்த உசிரு என்ன பாவம் செஞ்சது, இப்ப பாவம் செய்யிறவன் என்ன கத்தி ஆவான், என்ன கணக்குன்னு நமக்குத் தெரியாது, ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் கணக்கு தப்பவும் தப்பாது. 


ஒருத்தன் சீரழிச்ச புள்ளைக்கு , அது சீரழிவு இல்லைனு புரிய வை. மனசு சுத்தம் தான் கடவுள். நல்லதோ கெட்டதோ சமநிலையில் பார்க்கிற பக்குவம் தான் அவன் அருள் கொடை. உன் பக்குவத்துக்கு ஏத்த மாதிரி அவன் காட்சி கொடுப்பான். இது அவனவனா உணர்ந்து தெளிய வேண்டிய விஷயம்.


இது சரி, இது தப்பு, நீ கும்பிடு, கும்புடாதேன்னு அடுத்தவனுக்குச் சொல்லித் தராதே. எங்க பிள்ளைகளுக்கு நாங்க சொல்லி கொடுத்துவுக்கோம்”என முத்து சாமி, ஆக்ரோசம், ஆவேசமின்றி அமர்த்தலாகச் சொன்னார்.


“அப்ப மதம் மாறி போறவங்களுக்கு என்ன சொல்றிங்க “எனக் காவி சட்டைகேட்க. “ எல்லாச் சாமியும் ஒன்னு தான், அவனுக்குக் கடவுள் எந்த  விதத்தில் காட்சி கொடுத்தாரோ, அதை  பிடிச்சுக்குறான். ஆனால், நீ இதைச் செய், நான் உன்னைக் கும்புடுறேன்னு போறவன், எந்த மதத்துக்கும், ஏன் அவனுக்கு அவனே உண்மையானவனா இருக்க மாட்டான்” என்றார்.


“ சாமி கும்பிபுடுற மாதிரி, சாமி இல்லைங்கிறதும் ஒரு கொள்கை தானே, அதைச் சொன்ன எதுக்கு ஒதுக்கி வைக்கிறிங்க ”என் ராசய்யா கேள்வி எழுப்ப, முத்துப்பேச்சி  மறுபடியும் ஆரம்பிக்கிறியா ‘ என முறைத்தாள்.


“உன்னை எப்ப நான் ஒதுக்கி வச்சேன், அப்படி ஒதுக்கி வச்சா என் பேத்தியை உனக்குக் கட்டி கொடுக்கச் சம்மதிச்சு இருப்பேனா. உன்னைக் கேள்வி கேட்க கூடாதுன்னும் சொல்லலை, ஆனால் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு ,ஒரு முடிவுக்கு வந்தவனா , பிடிவாதமா கேட்காத, உனக்குள்ள கேள்வியைக் கேளு. 


சங்கடம் வரும் போது, தானே சாமியே இல்லைனு வசனம் பேசுறீங்க, அந்தச் சங்கடம் தான், உன்னை வலுவான மனுசனா மாத்தும், மனுச சித்தம், நாளுக்கு நாள் மாறக் கூடியது. உன் கையும், காலுக்கு ஓயும் போது, உன் மேலையே உனக்கு நம்பிக்கை குறையும். நம்பிக்கை குறைஞ்ச மனுஷன் ரொம்ப ஆபத்தானவன். அவனையும் காத்து, சமுதாயத்தையும் காத்து நிக்கிறது இறை நம்பிக்கை, அங்க துணை நிக்கிறவன் தான் கடவுள். “ என முத்துசாமி பேச,ராசய்யா சிந்திக்க ஆரம்பித்தான்.


அவன் யோசித்து நிற்கும் நேரமே, 'கருப்பா, இந்த விபூதியை, மாமன் பூசிக்கிச்சுன்னா, நான் அதைக் கட்டிக்குவேன், இல்லையினா உனக்குச் சேவகம் பார்த்துகிட்டு இருந்துக்குறேன், முடிவு உன்னது தான் ‘என முத்துப்பேச்சி, விபூதியை ராசய்யாவின் நெற்றியில் பூச வர, ஒரு நிமிடம் தயங்கியவன், அவள் முகம் சுருங்கவும், “ உன் நம்பிக்கைக்காகப் பூசிக்கிறேன்” என நெற்றியை நீட்டினான். “கருப்பா, என் மாமனுக்கு நல்ல புத்தியைக் கொடு’ என்ற வேண்டுதலோடு பூசி விட, பவளாயி சிரித்தார்.


“அய்யா, கடவுள் இருக்கார்னு ஒத்துக்குறிங்க, நம்ம மதத்து கடவுளைத் தான் கும்புடுறீங்க, நம்ம கட்சியில் சேரலாமே” எனக் காவி சட்டை கருத்து தெரிவிக்க,


மீண்டும் கலகலவெனச் சிரித்த, முத்துசாமி, “நீங்க, உங்க கட்சியை வளர்க்க மதத்துக்குக் காவலன் வேஷம் கட்டுறீங்க, அவுங்க சாமி எது, பிற்பாடு வந்த சம்பிரதாயம் எதுன்னே தெரியாமல் எதிர்த்து நிக்கிறாங்க. உங்க இரண்டு கட்சியும் ஆரம்பிக்கும் முன்னையும் , நாங்க சாமி கும்பிட்டோம், உங்களுக்கு அப்புறமும் நாங்க சாமி கும்பிடுவோம். 


எங்க நம்பிக்களுக்குள்ள, உங்க கட்சியை வளர்க்க பார்க்காதீங்க, அவுங்க அப்படி தான் கத்துவாங்கன்னு, உங்களை கடந்து போயிகிட்டே இருப்போம். நீங்க சட்டையில், அடையாளத்தில் காட்டுறிங்க, நாங்க வேட்டியில் பக்தியை காட்டுறவுங்க. எங்க ஊர், எங்க சாமி, நீங்க உள்ள வராதீங்க! “ என முடித்தார் சாமியாடி முத்துசாமி.


எங்க ஊரு எங்க சாமி ! நீ உள்ள வராதே !




Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே