புன்னகை

 


 புன்னகை



மனம் மகிழும் தருவாயில்

அகம் மலர்ந்து அவதரிக்கும்

அதரம் சிந்திய முத்து புன்னகை!


அழுது பிறந்த உயிர்கள் மகிழ

படைத்தவன் தந்த பரிசு,பல்

வரிசை தெரிய விரியும் புன்னகை!


அரும்பின் கனவில் ஆனந்தம்

மறை பொருளாய் நின்ற மாயன்

தந்ததோ பச்சிளம் புன்னகை!


சுற்றம் பழகி சொந்தம் பழகி

வேடிக்கை விளையாடி விளைந்ததோ

செல்லக் குழந்தை குதூகலப் புன்னகை!


தானே ஆடித் திரிந்து ஓடி மகிழ்ந்து

தோழியர் சூழ ஆனந்த ஆட்டம்

இயல்பாய் வந்ததோ பதின்மப் புன்னகை!


கண்ணாளன் காண காணாது மறைந்து

காணாத பொழுது கண்டு நெகிழ்ந்து

கனிந்து வந்ததோ கன்னிப் புன்னகை!


மணம் புரிந்து கலவித் திரிந்து

அகநானூறும் பயின்று நாணி

நயமாய் விரிந்ததோ நங்கையர் புன்னகை!


தாய்மை சுமந்து தளர்ந்து அமர்ந்து

தானே பிளந்து வலித்துப் பெற்று

பிள்ளை முகம் காணுமோ தாய்மையின் புன்னகை!


இல்லறம் நடத்தும் நல்லறத் துணை அவள்

இன்பம் துன்பம் யாவும் கண்டு

என்றும் மாறாததோ தைரியப் புன்னகை!


தளர்ந்த வயதில் தள்ளாது நின்றாலும்

கைதலம் பற்றியவர் தோள் கொடுத்து

துணையாக வந்ததோ அனுபவப் புன்னகை!


கைலாயம் நோக்கி காத தூரம் பறந்த போதும்

உயிர் தாங்கிய மேனியில் உறைய விட்டு

மாறாது நின்றதோ அந்த சாந்தப் புன்னகை !


எம் மங்கையர்க்கு அணி சேர்க்க

பொன்நகை தேவை இல்லை

இப் புன்னகையே போதுமடி !

Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே