குதிரை என்னம்மா செய்யும்.
1. குதிரை என்னம்மா செய்யும்.
ஆரம்பப் பள்ளி இளந்தளிர் பருவம். தமிழ்,கணிதம் புத்தகம் மட்டுமே கண்டதுண்டு, ஏ,பீ ,சீ,டி என்பதே ஆங்கிலம் என்போம், அறிவியல்,வரலாறு பாடங்கள் அறியோம், ஒரு கோடு போட்ட நோட்டு இரண்டு, நாலு கோடு போட்ட ஆங்கில நோட்டு ஒன்று, சிவப்புக் கோடு மார்ஜின் கணக்கு நோட்டு. இதுவே அதிகம் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கு, வீட்டுப் பாடம் எழுத நோட்டுகள் கிடையாது, வண்ண வண்ண நெகிழி சட்டை போட்ட சிலேட்டுகள் உண்டு வெவேறு அளவில். அதில் எழுத வென்றே உருண்டை மாவு குச்சி, பட்டையாய் எழுதக் கட்டை குச்சி வேகமாய் எழுதும் கட கட குச்சி. ஆசிரியை கரும்பலகையில் எழுதும் போதே மனனம் செய்து ,நகலும் எடுப்போம் நோட்டில், என் கையெழுத்து காந்திஜிக்கே சவால் விடும், என் நோட்டின் துணையும், என் சொல்லின் துணையுடன் , அம்மா நகலெடுப்பார் அண்ணன் ,அக்காள் சிலேட்டில் வீட்டுப்பாடம் அழிக்கவென்றே தம்பி,தங்கை தவழ்ந்து வரும், அதில் பிழைத்து அழியாமல் ஆசிரியை கையில் சேர்ப்பிக்கும் வரை கண்ணும் கருத்துமாய்க் காக்க வேண்டும். ஒரு நாள் மாய்ந்து,மாய்ந்து நான் எழுதியதை மறைத்து வைக்க மறந்து போகத் தவழ்ந்துவந்த என் இளவல் அதை அளித்துவிட்டான்! அன்று வந்த சோகம் இன்றும் என் நினைவில். குதிரை என்ன செய்யும் என்பது கேள்வி!
அழுகையும்,ஆற்றாமையும் ஒன்று சேர குதிரை என்னம்மா ......செய்யும் என்று வினவ. குதிரை வண்டி இழுக்கும், புல்லு என்றால்வாயைத் திறக்கும், கொள்ளு என்றால் வாயைமூடிக் கொள்ளும் என் அம்மா பதில்- ஓர்முறை. இவ்வளவு பெரிய வாக்கியம் வேகமாய்ச் சொன்னால் எப்படி, குதிரைக்குச் சின்ன‘ரை’வருமா,பெரிய ‘றை’யா? வண்டிக்கு வரும் 'ண்' இரண்டு சுழியா,மூன்று சுழியா என எத்தனை குழப்பங்கள், தமிழ் எளிது என்று யார் சொன்னார்? எனவே ஒவ்வொரு முறையும் மீண்டும் கேள்வி கேட்பேன் அழுகையோடு… "குதிரை என்னம்மா ...... செய்யும்" அம்மா பொறுமைசாலி ஒவ்வொருமுறையும் சலியாமல் பதிலளிப்பார். வீட்டுப் பாடம் எழுதும் முன்னே வீடு இரண்டு பட்டது. மூன்று வரி முடியும் முன்னே முப்பது முறை அதே கேள்வி! பொறுத்து,பொறுத்துப் பார்த்த என் தாத்தாவுக்கே வெறுப்பு வர, அடுத்த முறை நான் வினவும் போது வேகமாய் வந்தார் அவர், நான்.......குதிரை என்னம்மா ...... செய்யும்? தாத்தா ....குதிரை லத்தி போடும் ! கொள்ளுக்குக் குதிரை வாய் மூடுமோ தெரியாது என் தாத்தாவின் சொல்லுக்குக் கொள்ளெனச் சிரித்தது வீடு. அன்று முதல் என்னை வம்பிழுக்கும் அடுத்தஅஸ்திரமானது...... குதிரை என்னமா செய்யும்!
Comments
Post a Comment