நவரசம்

 நவரசம்



1.கோபம் 

எனதும்,உனதும், உலகிதும் ஆன

இயலாமையின் இயல்பான வெளிப்பாடு 

எதையோ மாற்றத்துடித்து 

இயலாது  வந்த துடிப்பின் வெடிப்பு 

ஏதேனும் செய்வோமோ எனும் 

எண்ணத்தின் பிரதிபலிப்பு 

எதையோ செய்துவிட்டு பின் 

அணுவணுவாய் அதன் தவிப்பு 


உடல் நடுங்கும் சிலவேளை 

ஓங்கி ஒலிக்கும் குரல்வலை 

கண்கள் சிவக்கும் பளபளப்பில் 

காய்ந்து வடியும் கண்ணீரும் 

நெஞ்சம் கொதித்து தகிக்கும் 

அடிவயிறும் அலறும் 


நரம்புகளின் புடைப்பும் 

வார்த்தைகளின் தடிப்பும் 

கண்களின் எரிப்பும் 

நிற்கட்டும் ஓர்கணம் 

குணத்தோடு உரையாடி 

கோபத்தை ஜெயித்திடுவோம் 

**************************************************************

2.அச்சம் 

அச்சம் இல்லை அச்சம் இல்லை 

எனப் பாட நான் ஒன்றும் 

முண்டாசுக் கவி பாரதி இல்லை 


ஒன்றை பெரும் விருப்பும் 

அதை தொலைப்பேனோ எனும் 

அச்சம் கொண்ட பாவை தான் 


ஒளி மறைத்த இருளும் 

எனை ஆட்டிப் படைக்கும் 

ஓராயிரம் கற்பனையாய் 

வந்து வாட்டி வதைக்கும் 


ஓரறிவு உயிர் முதலாய் யாவும் 

ஆறறிவு படைத்த  என்னையும் 

வகை வகையாய் பயப்படுத்தி 

எள்ளி நகைத்திருக்கும் 


அறிவற்ற ஜடப் பொருளானாலும் 

 அன்னம் ஆக்கி தரும் பாத்திரமும் 

பிகிலடித்து ஓர் நாள் சோறு வீச 

அனுதினமும் மிரட்டி திகிலடிக்கும் 


நிதர்சனமாய் வரும் நிகழ்வுகளும் 

அவ்வப்போது வரும் கனவுகளும் 

ஆற்றாமையாய் வரும் துன்பங்களும் 

மிகை படுத்தி திகைக்க வைக்கும் 


இத்தனையும் அகத்தில் வைத்திருக்கும் 

எக்கணமும் அதில் லயித்திருக்கும் 

திக்கற்ற பாவைக்கு எங்கிருந்து வரும் 

பாரதியின் அச்சம் இல்லை எனும் பாட்டு


திரைக்குப் பின்னால் சென்று பார் 

தெளிவு பிறக்கும் ,பற்றற்ற பாசம் வை 

பரமன் மேல் பாரம் சுமத்து -அச்சம் 

அஞ்சி ஓடும் என்கிறது ஓர் குரல் 


 **************************************************************

3.நாணம் 

பெருமை சேர்க்கும் வண்ணம் 

பெண்ணவளின் ஆபரணமாய் 

அலங்கரிக்கும் தேவதையாய்  நீ 


முகமறியா அன்னியர்முன் 

முதல்முறையாய் வந்துநிற்க 

நானிக்கோணும் குழந்தையாய் நீ 


செய்யாதை  செய்ததனால் 

வேடிக்கையாகிவிட அதில் 

அசட்டுப் புன்னகை சிறுவனாய் நீ  


குச்சுக் கட்டில் குடிபுகுந்து 

மற்றவரை பார்க்க மறுக்கும் 

மஞ்சள் வண்ணப் பாவையாய் நீ 


அரும்புமீசை முளைக்கும் போது 

அடுத்த வீட்டு அழகி முன்னே 

பார்வை தவிர்த்த காளையாய் நீ


கடைக்கண் பார்வை மைவிழியில் 

மயங்கி நிற்கும் அக்கணத்தில் 

தவித்து நிற்கும் காதலர்களாய் நீ 


பெரும் புகழும் தலையில் ஏற 

முகஸ்துதியாய் அவனைப் பாராட்ட 

வென்ற தலைவன் முகத்திலும் நீ 


மனம் முடித்த மங்கையின் 

திருவற்றில் பந்தம் தாங்க 

தம்பதியின் பூரிப்பிலும் நீ 


அசட்டுதனமாய் மாட்டிக்கொண்ட 

அரசியல்வாதியிடம் மட்டும்  

அகப்படவே மாட்டாயோ நீ 

**************************************************************

4.பெருமிதம் 

நான் மறையும் நீதி நெறியும் 

பிறந்த நாடு இதுதான் 

காவியின் மகத்துவம் தியாகம் 

என்பதை உணர்ந்தது தான் 


களப்பிரர் காலம் முதல் 

களவாடி கூட்டம் வரை 

பல சோதனைப் பொழுது 

வேதனையுடன் கடந்தது தான் 


ஆதிக்க சக்திகளின் கையில் 

செய்வதறியா குலமகளாய் 

தன்மானம் காக்க தவிப்புடனே 

நிர்கதியாய் நின்றது தான்  


ஆயினும் அன்னையின் துகிலை 

ஆதரவாய் ,மதிப்புடனே காத்திட 

தவப் புதல்வர்கள் பலர் பிறந்திட 

தன்மானம் காத்து நிமிர்ந்தது தான் 


இமயம் முதல் குமரிவரை 

ஒன்றெனவே இணைந்தது தான் 

பலமொழி பேசித் திரிந்தாலும் 

இந்தியன் என உணர்வது தான் 


பிறந்த பொழுதினும் சிறந்த தருணம் 

மூவர்ணம் தாங்கிய என் நாட்டுக் கொடி 

பட்டொளி வீசி பார் புகழ வின்னளவில்  

பெருமிதமாய் என்றும் பறப்பது தான். 



**************************************************************

5.உவகை 

மலடி என்ற பட்டம் நீக்க 

என் உள்ளிருந்து உதைத்த 

நின் பிஞ்சு மலர்ப்பாதம் 

விஞ்சி நிற்கும் உவகை 


எச்சில்  வழிந்தோட மழலை  

சாரல்  மழைப் போல் பொழிந்த 

நின் அதரம் சொட்டிய நின் 

அம்மா எனும் சொல் 


பள்ளி படிக்கவென நின் 

பிஞ்சு விரல் தொட்டு 

வகுப்புவரை உன்னை 

விட்டுவந்த பெரும் உவகை 


சிறந்த மகன் இவன் என 

ஊரார் உன்னை போற்ற 

பெற்ற பொழுதினும் மிக்க 

பெருமையாய் பேருவகை


மணந்தவர் மன்னவ்ராயினும் 

நாடாளும் நாயகன் ஆயினும் 

என் பிள்ளை கொண்ட வெற்றி 

எத்திக்கிலும்  சொல்லும் உவகை 


புருசர்களில்  உத்தமனாய் உயர் 

ரகு குல ராமனைப் போல் நீ 

உயர்ந்து நிற்கும் நாளை காண

ஏங்கி நிற்கும் எதிர்பார்ப்பிலும் 

உண்டு மட்டில்லா எனது உவகை.



**************************************************************

6.வெகுளி

நாலுப் பிள்ளைப் பெற்றவள் 

நயமாய் வளர்க்கத் தெரிந்தவள் 

கூட்டும் குழம்பும் பொங்கி 

கூட்டுக் குடும்பம் நடத்தி 

சலவைத் தொழிலும் செய்து 

சமரச வாழ்வை நடத்தியவள் 


கணவன் ஓர் புறம் நழுவ 

நாத்தி ஒருபுறம் இடிக்க 

மாமி ஒருபுறம் சலிக்க 

மாமனின் கோபமும் பொறுத்து 

நான்கு பேருக்கும் நயந்து 

நல்லவள் எனப் பேறேடுத்தவள் 


சம்சார சாகரம் எனும்  கடலில் 

எதிர் நீச்சல் அடித்து நிமிர்கையில்  

ஆயுள் கணக்கில் அறுபதும் முடிந்து 

நரை முடியும் தளர்ந்து விழுந்து 

தனக்கென ஓர்  வாழ்விருப்பதை 

என்றும் அறியாதவளே  வெகுளி!



**************************************************************

7.இழிவரல் 

ஈயென இரத்தல் இழிதன்றாம் 

ஈயேன் என மறுத்தல்  இழிதாம் 

ஆயிரம் ஆண்டுகள் முன்னே 

புறநானூறு தந்த மதிமொழி இது 


நிலமும்,நீரும்,காற்றும்,ஒளியும் 

உழவர் தம் உழைப்பும் சேர்ந்து 

உபரியாய் உணவை அளித்தும் 

பசிய வயிறு குழிந்து இருத்தல் 


மானிடம் மடிந்து சுயநலம் பெருகி 

அன்னசாலைகள் அனைத்தும் மூடி 

இலவச அரிசியும் விலைப் பேசி 

அற்ப மானிடர் உலவுதல் இழிதாம் 


கோனும் குடியின் நன்மை கருதா 

மானியம் என்னும் நேயம் குறைத்து 

வியாபாரம் செய்யும் சந்தையாய் 

அரசினை நடத்தல் அதனினும்  இழிதாம்  



**************************************************************

8.அமைதி 

மண்ணில் வந்து பிறந்து விட்டோம் 

மாயையின் கைகளில் அகப்பட்டோம் 

ஆடும் வரை ஆட்டம் 

ஓடும் வரை ஓட்டம் 


வாழ்க்கை என்னும் பெரும் கடல் தான் 

வாழ்வும் ஓர் பெரும் சுமை தான் 

அஞ்சுவதில் அஞ்சி நின்று 

கெஞ்சி கூத்தும் ஆடி நின்றோம் 


போகும் வழி இது தான் என்றே தொடங்கி 

பாதி வழியில் பாதை மாறி நின்றோம் 

மாறிய பாதை அறியாது 

வெகுளியாய் முன்னேறினோம் 


வழிப்  பயணம் கடினம் தர வாடி நின்றோம் 

வழித் துணையை மனதில் நாடி நின்றோம் 

நம் இழிவுகளை நாமே சகித்து 

மனதினை நல்  வழியில் திருத்தி 


ஆட்டம் ஆடும் அகத்திணை நிறுத்தி 

சஞ்சலம் பேசும் மனதை அடக்கி 

திடம் கொண்ட சித்தத்துள் சிவம் நிறைத்து 

அமைதி எனும் அருள் பெறுவோம்.



Comments

Popular posts from this blog

DS நாவல்கள்

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே.

மனச தாடி என் மணிக்குயிலே