பனங்கொட்டை சாமியார்.
பனங்கொட்டை சாமியார்.
என்னை ஆட்டி படைத்த அதிசய சாமியார். பழுப்பு வண்ணம் கொண்ட பரட்டை சாமியார். முன் அறையிலிருந்து முறைத்த சாமியார் முறுக்கு மீசை கொண்ட முரட்டுச் சாமியார். சண்டித்தனம் செய்த எனை சரிகட்ட என் அன்னைக்கு உதவிய அருமை சாமியார், விட்டுக் கொடுக்க மறுக்கும் என்னை உடன் பிறப்புகளுக்காய் விரட்டிய சாமியார், இவர் பெயர் சொன்னால் போதும் பின்னங்கால் பிடரியில் பட காத தூரம் ஓடுவேன் யான். வீட்டுக்குள் புகாமலேயே வேறு புகலிடம் தேடி அலைவேன் யான். அப்படி சக்தி படைத்த சாமியார் யார்? சப்பி போட்ட பனம்பழத்தில் முளைத்தவர் அவர். தலை விரி கோலமாய் இருந்தவர் அவர். கைவினைஞன் கை பட்டு அவதரித்தவர் அவர். மிளகு போன்ற கண்கள் கொண்டவர் வில் போன்ற புருவம் கொண்டவர் கோபம் கொண்ட மீசை கொண்டவர் மிளகாய் பல அதரம் கொண்டவர். சிங்கம் போல் பிடரி முடி முகம் கொண்டு, சிறிதே முறைத்த வண்ணம் நிலைப்படி மேலே ஆணியில் தொங்கும் திருஷ்டி பொம்மை எங்கள் பனங்கொட்டை சாமியார். வளர்ந்து வரும் செயற்கை உலகில் அவதரித்த ஆயிரம் கலவைகளால் இவ்விடம் விட்டு மறைந்த மாய சாமியார், செயற்கை மறைத்த இயற்கை சாமியார். பயம் விட்டு பாசமுடன் அழைத்தாலும் வாராத இடம் நோக்கிப் பரந்த சாமியார். பார்வைக்காகக் கூட ஒரு அவதாரம் தராத எங்கள் பனங்கொட்டை சாமியார்.
Comments
Post a Comment